முகப்பு | HOME

எனது வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோதனை செய்கின்றனர்: அசாத் சாலி

asathதனது வீட்டிற்கு வருகைதரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் இருந்தவண்ணம், வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர்.
இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது.
நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர். பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள் என்றார்.-TC


வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கு அச்சுறுத்தல்!- ஐவர் கைது

[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 12:14.00 AM GMT ]



கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்துபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கைதுசெய்யப்படடுள்ளனர்.
இன்னும் இரண்டு பேர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரையான போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 24 கண்காணிப்பு கமராக்களும் முற்றாக எரிந்துள்ளன.
எனவே அதன் தரவுகளை மீளப்பெற முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை

First Published : 23 October 2013 06:48 PM IST
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சில சிங்கள அடிப்படை வாத அமைப்புகள் முயற்சிப்பதாக  அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம் மக்களை குறிவைக்க முயற்சித்து வருகின்றனர்.
போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் மக்கள் நாட்டுடன் ஒன்றாக கைகோர்த்திருந்தனர். முஸ்லிம் மக்களை நாட்டுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது.
முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிக்க முயற்சிப்பவர்களுக்கோ அல்லது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கோ எப்பொழுதும் ஆதரவு வழங்கியதில்லை.
முஸ்லிம் தலைவர்கள் ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று கொடுத்தனர்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபட்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை வழங்கியே வந்துள்ளனர்எனவும் அவர் தெரிவித்தார்.

எம்மீது நிகழ்த்தப்பட்டது சாதாணர இனவாதத் தாக்குதல் மட்டுமன்றி, ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும்’


18ஊடகப்பிரிவு: ‘எம்மீது நிகழ்த்தப்பட்டது சாதாணர இனவாதத் தாக்குதல் மட்டுமன்றி, ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும்’ என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் -நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
‘கடந்த 15ம், 16ம் திகதிகளில் பொது பல சேனா மற்றும் ராவண பலயா போன்ற பேரினவாத பௌத்த திவிரவாத அமைப்புக்களினால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம மற்றும் தர்ஹா நகர் பிரதேச முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஒரு இனவாதத் தாக்குதல் மாத்திரமல்ல, அவை முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும். அதற்கான மறுக்க முடியாத சான்றுகள் இங்கே களத்தில் இருக்கின்றன’ என குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபைப் பிரதிநிதிகளிடம் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமைத்துவ சபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் நேற்று (23.06.2014) திங்கட்கிழமை தர்ஹா நகர் மற்றும் அளுத்கம பிரதேசங்களுக்கான மற்றுமொரு களப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே இவர்களிடம் கருத்துத் தெரிவித்த அப்பிரதேச முஸ்லிம்கள் மேற்கண்ட கருத்தினை வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதுதொடர்பில் பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்ததாவது:
‘கடந்த 15ம் திகதி மாலை அளுத்கம நகரில் இடம்பெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக உரையாற்றிய ஞானசார தேரர், இன்றுடன் அளுத்கம, தர்ஹா நகர் முஸ்லிம்களுக்கும் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்த நாங்கள் அளுத்கம பிரதான வீதியில் நின்று கொண்டிருந்தோம். கூட்டம் முடிவடைந்த கையோடு எல்லைப்புற முஸ்லிம் கிராமங்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதாகவும், வீடுகளுக்குத் தீ வைக்கப்படுவதாகவும் எமக்குத் தகவல்கள் வந்தன. இதிலிருந்து இந்தத் தாக்குதல் ஒரு இனவாதக் குழப்பம் மாத்திரமல்லவென்பதும், இது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும் என்பதும் எமக்குத் தெளிவாகின்றது’
இன்னுமொரு பிரதேசவாசி கருத்துத் தெரிவிக்கையில், ‘நாங்கள் பள்ளிவாசலின் பின்பக்கமாகச் சென்று ஒளிந்து கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் இருந்த பக்கமாக ஒரு குண்டு வீசப்பட்டது. எனினும் அழ்ழாஹ்வின் பாதுகாப்பினால் அக்குண்டு எங்கள் மீது விழாமல் பள்ளிவாசலின் சுவர்ப்பக்கமாக இருந்த வெற்று நீர்த்தாங்கி ஒன்றுக்குள் விழுந்து வெடித்தது. அது சாதாரணமான ஒரு பெற்றோல் குண்டாக இருந்திருந்தால் நீர்த்தாங்கியைச் சூழ இருந்த சுவர்கள் எல்லாம் இவ்வாறு முழுவதுமாக சிதிலம் சிதிலமாக வெடித்துச் சிதறியிருக்க முடியாது. புயங்கரவாதிகள் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த குண்டுகளையே தாக்குதலின்போது பயன்படுத்தி இருக்கினறார்கள். எனவே, இது சாதாரண இனக்கலவரம் அன்றி எம்மீது நடாத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலேயாகும்’ என்றார்
இத்தாக்குதல் சம்பவங்களின்போது வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி காலமான இரு முஸ்லிம் சகோதரர்களின் மரண வேளைச் சம்பவம் தொடர்பில் அதனை நேரில் கண்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, ‘காயப்பட்ட ஒருவரின் தலையில் ஒரு பக்கத்தால் பாய்ந்த துப்பாக்கி ரவை அடுத்த பக்கத்தால் வெளியேறியிருந்தது. மற்றவரின் நெஞ்சில் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுப்புறமாக வெளியேறியிருந்தது. அதிகமான இரத்தக்கசிவினால் அவர்கள் இருவரும் பள்ளிவாசலினுள் துடித்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு என்ன செய்வது? ஏது செய்வது? என்று ஒன்றுமே அந்த நேரத்தில் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள் எங்களை விட்டும் பிரிந்தார்கள்.’
‘அப்படியானால் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் யார்? யார் அந்தத் துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கினார்கள்? பொது பல சேனாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பயங்கரவாதக் குழுவொன்று இந்த நாட்டில் இருக்கின்றதா? அதுமாத்திரமல்ல, துப்பாக்கிச் சூட்டின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களின் ஜனாஸாக்களை வைத்திய பரிசோதனை செய்த பின்னர் வழங்கப்பட்டுள்ள வைத்திய அறிக்கையில் அவர்கள் கூரிய ஆயதங்களினால் தாக்கப்பட்டு மரணம் சம்பவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்தப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்கு அரச தரப்பில் முயற்சி செய்யப்படுகின்றதா?’ எனவும் அந்த மக்கள் கேள்வி எழுப்பினர்.
சம்பவங்களை நேரில் கண்ட மக்களின் சாட்சியங்களைப் பார்க்கும்போது, இதனை சாதாரண ஒரு இனக்கலவரமாகக் கொள்ளப்பட முடியாது. மாறாக பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் தலைமையில் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
சம்பவங்கள் நடைபெற்று எட்டு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நேர்மையான ஆர்வத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை.
மாத்திரமன்றி, நடந்த சம்பவங்களை மிகச் சாதாரண சம்பவங்களாகக் காட்டி இதற்கு முஸ்லிம் சமூகமும் பொறுப்பாகும் என பொறுப்பற்ற முறையில் குற்றஞ்சாட்டி தமது அடிப்படைப் பொறுப்புக்களில் இருந்து நழுவிக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.
அரசாங்கம் உறுதியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதிருப்பதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மெதுமெதுவாக வேறு இடங்களுக்கும் பரவுகின்ற அபாயமும் தெரிகின்றது.
இதற்கிடையில், கடந்த 21ம் திகதி சனிக்கிழமையன்று அதிகாலை வேளையில் பாணந்துறை நகரில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த பிரபல முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, வன்முறைகளைக் கட்டுப்படுத்தி, வன்முறையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துகின்ற கடமையைச் செய்வதில் தொடர்ந்தும் பொடுபோக்காக நடந்து கொள்கின்ற அரசாங்கத்தின் போக்குகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
எனவே, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி, தேசத்தின் நற்பெயரைக் காப்பாற்றுகன்ற கடமையினை இனிமேலும் தாமதிக்காது அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

No comments: